*ரயில்வே போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 2 வாலிபர்களின் மண்டை உடைந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (26). திருப்பத்தூர் அருகே உள்ள லக்கிநாயக்கன்பட்டி அடுத்த பல்லாளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பூவரசன் (27). இவர்கள் இருவரும் சென்னையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்குள் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் சென்னையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இருவரும் ஜோலார்பேட்டை வந்தனர். அங்குள்ள 4வது பிளாட்பாரத்தில் இறங்கியதும் இவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர்.
இதில் இருவரின் மண்டை உடைந்து ரத்தம் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் ரயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
