நடத்தையில் சந்தேகம்; மனைவி கழுத்தறுத்துக் கொலை: கணவர் வெறிச்செயல்

 

ஆம்பூர்: ஆம்பூர் அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை கழுத்தறுத்து கணவர் கொலை செய்துவிட்டு மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் பாபு (35). இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஹாலோபிளாக் தயாரிப்பு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேவி (34). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தேவியின் நடத்தை மீது பாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். தொடர்ந்து தகராறு காரணமாக சில மாதங்களுக்கு முன் தேவி அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் மாமியார் வீட்டிற்கு பாபு பலமுறை சென்று மனைவியை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்தாராம். நேற்று மீண்டும் மாமியார் வீட்டிற்கு சென்ற பாபு, மனைவி தேவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இரவு குழந்தைகள் 3 பேரும் வீட்டின் மாடியில் தூங்கச்சென்றனர். கணவன், மனைவி இருவரும் வீட்டின் தரைதளத்தில் தூங்கியுள்ளனர். இன்று காலை மாடியில் இருந்து எழுந்து வந்த குழந்தைகள், வீட்டிற்குள் தனது தாய் கழுத்தில் காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். இவர்களின் கதறலை கேட்ட அப்பகுதியினர் விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், மனைவி மீது நடத்தை சந்தேகத்தில் இருந்த பாபு, நள்ளிரவில் மீண்டும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அவர், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து தேவியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: