கல்வி உதவித்தொகை தருவதாக கூறி க்யூஆர் ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ்: கல்லூரி மாணவன் போலீசில் புகார்

குன்றத்தூர்: கல்வி உதவித்தொகை தருவதாக கூறி க்யூஆர் ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து காமாட்சி (50). கடந்த 20 ஆண்டுகளாக கடைகளுக்கு ஊறுகாய் மற்றும் ஜாம் விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் மகாலிங்கம் என்பவர் ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

அவருக்கு 12ம் வகுப்பு முடித்ததற்கு ரூ.48 ஆயிரத்து 500 உதவித்தொகை வந்துள்ளதாக ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து கடந்த 17ம் தேதி அழைப்பு வந்தது. அப்போது, அந்த மர்ம நபர், மகாலிங்கத்திடம், உங்களது வங்கி கணக்கிற்கு இந்த பணம் வர வேண்டும் என்றால் நாங்கள் அனுப்பிய க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள். அப்போது உதவித்தொகை உங்களது வங்கி கணக்கிற்கு வந்துவிடும் எனக் கூறியுள்ளனர்.

அதனை நம்பிய மகாலிங்கம், தனது செல்போனில் இருந்து மர்ம நபர்கள் அனுப்பிய க்யூஆர் கோடை ஸ்கேன் செய்துள்ளார். உடனே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகாலிங்கம், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தனது தந்தை முத்து காமாட்சி மூலம் புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு சைபர் குற்றத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: