சென்னை: பழனி கோயில் நில விவகாரத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யகுமார் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அறநிலையத்துறை அமைச்சரின் உதவியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வினோ சூர்யகுமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.சரவணம் ஆஜராகி, மனுதாரர் ஊடகவியலாளராவார். கோயில் நிலம் முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் பொது நலனுக்குப் பயன்படும் என்ற உண்மையான நம்பிக்கையின் பேரிலும், தகவல்களின் அடிப்படையிலும் அந்தப் பதிவுகள் வெளியிடப்பட்டது.
அமைச்சர் மீது தனிப்பட்ட விரோதமோ அல்லது பழிவாங்கும் உணர்வோ இல்லை என்று வாதிட்டார்.காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். எனவே ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.மனுவை விசாரித்த நீதிபதி, ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும்.
அரசையோ அதன் அமைச்சர்களையோ வெறுமனே விமர்சிப்பது, அரசுக்கோ அல்லது பொது அமைதிக்கோ எதிரான குற்றமாகாது. கோயிலுக்குச் சொந்தமான சொத்து சொற்ப விலைக்கு விற்கப்பட்டது என்பதோ அல்லது அமைச்சரின் உறவினருக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதோ மதம், இனம், வசிப்பிடம், மொழி, சாதி அல்லது சமூகம் அல்லது சமூகங்களுக்கு இடையே பகை, வெறுப்பை உருவாக்க வாய்ப்புள்ளதாகவோ அல்லது ஊக்குவிப்பதாகவோ கூற முடியாது.
அவதூறான, தரக்குறைவான கருத்துகளைக் கூறுவது அல்லது தவறான தகவல்களை வெளியிடுவது, அதிகபட்சமாக பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 356ன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றம் மட்டுமே தவிர அது ஒரு புலன் விசாரணைக்குரிய குற்றமாகாது. எனவே, மனுதாரர் தினமும் காலை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
