மதுரை: மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு எவ்வாறு மது விற்பனை செய்யப்படுகிறது என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த மானகிரி செல்வகுமார், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: மனமகிழ் மன்றங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கோரி ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கில், மாவட்ட பதிவாளர்கள், காவல்துறை மற்றும் கலால்துறை இணைந்து அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் திடீர் ஆய்வு நடத்த வேண்டும்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மன்றங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், சங்கங்களின் பதிவை ரத்து செய்யவும், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே செயல்படும் மனமகிழ் மன்றங்களின் உரிமங்களை மறு ஆய்வு செய்யவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சுற்றறிக்கை அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த பதிலில், மனமகிழ் மன்றம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதில் புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வகையில் உள்ளது. பல மனமகிழ் மன்றங்களில் போலி உறுப்பினர் பதிவுகள் மூலம், பொதுமக்களுக்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் ஒரே நேரத்தில் திடீர் ஆய்வு நடத்தி சட்டவிரோதமாக செயல்படும் மன்றங்களின் பதிவை ரத்து செய்தல், குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாவட்டவாரியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை, பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை புதிய மனமகிழ் மன்றங்க்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனமகிழ் மன்றங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும்.
ஆனால் உறுப்பினர் அல்லாதோருக்கும் எதன் அடிப்படையில் மது வழங்கப்படுகிறது? உறுப்பினர் அல்லாதோருக்கு மது வழங்குவது ஏற்புடையதல்ல. எனவே, மனமகிழ் மன்றங்கள் அவ்வப்போது ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டும். மதுரை கலெக்டர், கண்காணிப்பில் வருவாய் கோட்டாட்சியர், மதுவிலக்கு துறை உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆக.13ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
