சென்னை: சென்னை புதுப்பேட்டையில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் 3வது மாடி பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புதுப்பேட்டை பகுதி முழுவதும் இருசக்கர வாகன மெக்கானிக் கடைகள் நிறைந்துள்ளன. இங்குள்ள ஒரு குடோனில் இருசக்கர வாகனங்களுக்கான பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று மதியம் 1:30 மணியளவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, அந்த பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் யாருமே இல்லாததால், நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டவுடன் குடோனில் இருந்த பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் அனைத்தும் முழுமையாக எரியத் தொடங்கின. இதுகுறித்து அருகில் இருந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், 4 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரமாக இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் கரும்புகை சூழ்ந்ததால், சில மணி நேரம் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பாய்ச்சி, அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
