டெல்லியில் போலீசாரால் குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்பட்ட நிலையில் மருத்துவமனையிலும் உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் சோனம் வாங்சுக்

புதுடெல்லி: நீட் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் (59) கலந்து ெகாண்டார். அவரது உண்ணாவிரத போராட்டம் 21வது நாளாக தொடர்ந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் டெல்லி போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ‘சனிக்கிழமை காலை 7.40 மணியளவில் டெல்லி போலீசார் வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். கடந்த 20 நாட்களாக திட உணவு எதையும் உட்கொள்ளாமல் இருந்ததால் அவர் பலவீனமாகக் காணப்பட்டார். இருப்பினும், அவருக்கு மயக்கம் எதுவும் ஏற்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார். இதய துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கிறது. அதேநேரம் உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேலும், ரத்தப் பரிசோதனையில் உடலின் சமநிலையில் மாற்றம், ரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைவு மற்றும் ரத்த சர்க்கரை அளவு 78 எம்ஜி/டிஎல் என பதிவாகியிருந்தது.

சிறுநீரில் காணப்பட்ட கீட்டோன் அளவும் அதிகமாகவே இருக்கிறது. இதனால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இருப்பினும் எந்த மருந்தையும் வாங்சுக் ஏற்க மறுத்துள்ளார். அவரது உடல்நலன் கருதி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பும் ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சிகிச்சையை ஏற்க மறுத்து மருத்துவமனையிலும் வாங்சுக் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். அதே நேரத்தில், அவரது மனைவி கீதாஞ்சலி, மருத்துவமனையின் மருத்துவ அறிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று சந்தேகம் எழுப்பியுள்ளதுடன், தங்களுக்கு விருப்பமான வேறு மருத்துவமனைக்கு அவரை மாற்ற டிஸ்சார்ஜ் செய்ய கோரியுள்ளார். அதே நேரத்தில், வாங்க்சுக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகும், இந்த உத்வேகத்தை அளித்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’ மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரவு பகலாக தங்கள் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். இதனால் ஜந்தர் மந்தர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: