புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வில் ஓஎஸ்எம் திருத்த முறையில் முறைகேடு உள்ளிட்ட ஆகியவற்றுக்கு எதிராகவும், இந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக தொடர் அமைதி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் லடாக்கை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில், உண்ணாவிரத போராட்டத்தின் 21ம் நாளான நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் சாதாரண உடையில் வந்த காவலர்கள், போராட்ட மேடைக்கு சென்று, சோனம் வாங்சுக்கை குண்டுக்கட்டாக தூக்கி சென்று ஆம்புலன்சில் ஏற்ற டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே.ஆங்மோ டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், “எனது கணவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி புஷ்கர்னா, “சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது” என தெரிவித்தார்.
