புதுடெல்லி: 77 சாதிகளின் ஓபிசி அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மேற்கு வங்க அரசு திரும்ப பெற்றது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தை அரசின் ஆட்சிக்காலத்தில் அரசின் ஓபிசி பட்டியலில் 75முஸ்லீம் சமூகங்கள் உட்பட 77 சாதிகள் சேர்க்கப்பட்டதை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க மாநில அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் அரசு தனது மனுவை திரும்ப பெற விரும்புவதாகவும், மேல்முறையீட்டை திரும்ப பெறுதற்கு மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதே விவகாரம் தொடர்பாக மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தாக்கல் செய்திருந்த தனி மனுவையும் திரும்பப் பெறுவதற்கு அந்த அமர்வு அனுமதி அளித்தது.
