மகாராஜ்கஞ்ச்: உத்தரபிரதேச – நேபாள எல்லையில் உரிய ஆவணங்கள் இன்றி தப்பிக்க முயன்ற அமெரிக்க முன்னாள் கடற்படை வீரரை பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டம் மைனிஹ்வா பகுதியில் உள்ள இந்தியா-நேபாள எல்லையில், உரிய ஆவணங்கள் இன்றி நேபாளத்திற்குள் நுழைய முயன்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஜோர்டான் பிரவுன் (36) என்ற நபர் சாஸ்திர சீமா பல் பாதுகாப்பு படையினரால் கடந்த 11ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 31,460 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற எவ்வித முறையான பயண ஆவணங்களும் அவரிடம் இல்லை. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இவர், அந்நாட்டு கடற்படை மற்றும் சிறப்பு காவல்படையில் 6 ஆண்டுகள் பணியாற்றி 2024ம் ஆண்டு விலகிய முன்னாள் ராணுவ அதிகாரி என்று கூறியுள்ளார். எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் இவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது தப்பியோட முயன்றார். ஆனால் வீரர்கள் விரட்டிச் சென்று இவரைப் பிடித்தனர்.
இது தொடர்பாக மகாராஜ்கஞ்ச் கூடுதல் எஸ்பி சித்தார்த் கூறுகையில், ‘ஜோர்டான் பிரவுன் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றபோது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாகவும், பின்னர் கடல்வழியாக இலங்கை சென்று அங்கிருந்து கடல்வழியாக இந்தியாவுக்கு வந்து கோவாவில் வசித்து வந்ததாகக் கூறியுள்ளார். பின்னர் உத்தரகாண்டைச் சேர்ந்த ஒரு யோகா பயிற்சியாளரான இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், கோவாவில் சந்தித்த ‘நாஸ்’ என்ற நேபாள நபரை சந்திக்க எல்லையை கடக்க முயன்றதாகவும் ஜோர்டான் பிரவுன் முரண்பட்ட வாக்குமூலங்களை அளித்துள்ளார். அவர் மீது குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து அமெரிக்க தூதரகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
