ஐதராபாத்: வருமானத்திற்குப் பொருந்தாத சொத்துக்களைச் சேர்த்ததாக ஐதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் பி. ரவீந்தரை ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்தது. இந்த ஊழல் புகார் தொடர்பாக ரவிந்தரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், கூட்டாளிகள் மற்றும் பினாமி களுக்குச் சொந்தமான மேலும் 9 இடங்களில் ேநற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் ஐந்து காலி மனைகள், நான்கு குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்புகள் , நான்கு ஏக்கர் விவசாய நிலம், ஒரு பகுதி வசதிகள் கொண்ட குடியிருப்பு வில்லா மற்றும் தரைத்தளம் மற்றும் நான்கு மேல் தளங்களைக் கொண்ட கட்டிடம் உள்ளிட்ட பல சொத்து ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
மேலும், ரூ. 3.82 லட்சம் ரொக்கம், சுமார் ரூ. 45 லட்சம் வங்கி இருப்பு, சுமார் 1,440 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள், சுமார் 12.5 கிலோ வெள்ளி ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் நான்கு வாகனங்கள் ஆகியவை கண்டறியப்பட்டன. மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 9.24 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
