புதுடெல்லி: இந்தியா, இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று அமலுக்கு வர உள்ளது. இந்தியா, இங்கிலாந்து இடையே பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி கையெழுத்தானது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இங்கிலாந்து இந்தியாவிற்கான 99% ஏற்றுமதி பொருட்களுக்கு முழுமையான வரி விலக்கு (0% சுங்க வரி) அளித்துள்ளது. மறுபுறம், இந்தியா 90% இங்கிலாந்து பொருட்களுக்கான வரிகளைக் குறைத்துள்ளது.
இந்திய ஜவுளி மற்றும் ஆடைகளுக்கு 12% சுங்க வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. தோல் மற்றும் காலணிகளுக்கு 16% வரியும், கடல் உணவுப் பொருட்களுக்கு 21.5% வரியும், இயந்திரங்கள் & உதிரிபாகங்களுக்கு 18% வரியும், ரசாயனங்ங்கள் மற்றும் மருந்துகளுக்கு 8% வரியும் பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளன. இதே போல, இங்கிலாந்தின் ஸ்காட்ச் விஸ்கி மற்றும் ஜின்னுக்கான இறக்குமதி வரி 150%-லிருந்து 75%-ஆக இந்தியா குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது. இது, அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாக 40% ஆக குறைக்கப்படும்.
கார்கள் மற்றும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 110% முதல் 100% வரை இருந்த நிலையில், குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் கீழ் 10% ஆக குறைக்கப்படும். இந்த ஒப்பந்தத்தில், இந்திய விவசாயிகளின் நலன் கருதி, பால் பொருட்கள், சிறுதானியங்கள், உண்ணக்கூடிய எண்ணெய்கள், ஆப்பிள்கள் போன்ற முக்கிய துறைகள் விலக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
