புதுக்கோட்டை, ஜூலை 14: புதுக்கோட்டை ஆய்வகங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள மத்திய கட்டுப்பாட்டு ஆய்வகம், நுண்ணூட்ட உரக்கலவை உற்பத்தி மையம், உயிர் உரங்கள் உற்பத்தி மையம், மண் பரிசோதனை நிலையம், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் ஆகிய பிரிவுகளில் சுமார் 125 தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றனர். தற்போது அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.719 மட்டும் தினக்கூலியாக வழங்கப்படுவதாகவும், இந்த தொகை தற்போதைய விலைவாசி ஏற்றத்தில் தங்களது குடும்பங்களை நடத்த முற்றிலும் போதுமானதாக இல்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்ட உரக்கலவைகள் மற்றும் திரவ உயிர் உரங்களை உற்பத்தி செய்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள மையங்களுக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரசாயன உரங்கள் கையாள்வதால் இவர்களுக்கு கடுமையான உடல் நலப்பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
பிற மாவட்டங்களில் வேளாண்மை பணிகள் மேற்கொள்ளும் திறனுள்ள தினக்கூலிப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் நியாயமான கூலி விவரங்களை சுட்டிக்காட்டி, தங்களுக்கும் அதேபோல் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். எனவே, வரும் 2026-2027ம் நிதியாண்டிற்கு தங்களது தினக்கூலியை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், இரசாயன கையாளுதலால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகளை கருத்தில் கொண்டு தங்களுக்கு மருத்துவக்காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்ற சமூகப்பாதுகாப்பு சலுகைகளை உடனடியாக தயாரித்து வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு தொழிலாளர்கள் கலெக்டர் அருணாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
