தூத்துக்குடியில் நாளை மறுதினம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி, ஜூலை 14: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை மறுதினம் (16ம் தேதி) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 16ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் நடைபெறுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.

கஞ்சா விற்ற இருவர் கைது

தூத்துக்குடி, ஜூலை 14: தூத்துக்குடி தாளமுத்துநகர், மேற்கு காமராஜர்நகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் மேரி ஜெனிதா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனையிட்டனர். அப்போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள், மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த மகாராஜா மகன் சந்தனசெல்வம் (20), பாரதிநகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முகேஷ் (19) என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: