திருவண்ணாமலை, ஜூலை 14: திருவண்ணாமலை கலைஞர் நூற்றாண்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து புறநகர் பேருந்துகளும் நேற்று முதல் இயக்கப்படுகிறது. அதனால், பழைய பஸ் நிலையம் மூடப்பட்டது. போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள் குழப்பமடைந்தனர்.திருவண்ணாமலை நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் செயலிழந்து மூடப்பட்ட டான்காப் ெதாழிற்சாலை இடத்தில் சுமார் 10 ஏக்கரில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டு புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர், கடந்த ஜனவரி முதல் புதிய பஸ் நிலையம் செயல்பட தொடங்கியது. ஆனாலும், புதிய பஸ் நிலையத்தில் 2ம் கட்ட விரிவாக்க பணிகள் நடந்து வந்ததால், கூடுதல் பஸ்கள் நிறுத்த இடமின்றி சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, திருச்சி, மதுரை, நாகர்கோவில், கும்பகோணம் ஆகிய வழித்தடங்களுக்கான புறநகர் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது.
வேலூர், ஆரணி, காஞ்சிபுரம், செய்யாறு, வந்தவாசி, பெங்களூரு, கோவை, திருப்பதி, சேலம் உள்ளிட்ட வழித்தட பஸ்கள் அனைத்தும், பழைய பஸ் நிலையத்தில் இருந்தே வழக்கம்போல இயங்கி வந்தன. இந்நிலையில், புதிய பஸ் நிலையத்தில் விரிவாக்க பணிகள் முழுமையானதால், அனைத்து புறநகர் பஸ்களும் இங்கிருந்தே இயக்கப்படும் என கலெக்டர் வந்தனா கார்க் அறிவித்தார். மேலும், அதையொட்டி மேற்கொள்ளப்படும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும் அறிவிக்கப்பட்டது.அதன்படி, திருவண்ணாமலை கலைஞர் நூற்றாண்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முதல் அனைத்து புறநகர் பஸ்களும் முழுமையாக இயங்க தொடங்கியது. எனவே, கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்த பழைய பஸ் நிலையம் நேற்று முதல் மூடப்பட்டது. எனவே, அந்த பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில், புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்ல, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால், பொதுமக்கள் எந்த வழியாக பஸ்கள் வந்து செல்லும் என அறியாமல் குழப்பமடைந்தனர். மேலும், பழைய பஸ் நிலையத்துக்கு வழக்கம்போல வந்த பயணிகள் பலரும், அங்கிருந்து புதிய பஸ் நிலையத்துக்கு அவசர அவசரமாக செல்லும் நிலை காணப்பட்டது.மேலும், வேலூர், ஆரணி, காஞ்சிபுரம், செய்யாறு வழித்தடங்களில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் புறநகர் பஸ்கள் அனைத்தும், அறிவொளி பூங்கா வழியாக திருப்பிவிடப்பட்டதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ்கள் திடீரென திரும்புவது தெரியாமல், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நிலைத்தடுமாறி விழும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, அங்கு கூடுதலான போலீஸ் கண்காணிப்பு அவசியமாகி உள்ளது.அதேபோல், பெரும்பாலான பஸ்கள் திருவள்ளுவர் சிலை சந்திப்பு பகுதியாக கடந்துசெல்வதால், அங்கும் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. எனவே, ெநரிசலும், விபத்துகளும் ஏற்படும் பகுதியில் போக்குவரத்து போலீசார் தனி கவனம் செலுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
