புதுச்சேரி: புதுச்சேரி உழந்தை ஏரியை தூர்வாருவதாக கூறி வண்டல் மண் கொள்ளை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புதுச்சேரியில் 84 ஏரிகள் மற்றும் ஆயிரத்துக்கும் ேமற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைத்து கோடைக்காலங்களில் பயன்படுத்துவது வழக்கம். பிறகு நாளடைவில் நீர்நிலைகள் தூர்ந்து போய் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கிக்கொண்டது.
மேலும் நீர்நிலைகளை சுற்றிலும் குடியிருப்புகள் கட்டப்பட்டு சில குளங்கள் மாயமாகிவிட்டது. புதுவையில் உள்ள முக்கிய ஏரிகளான ஊசுட்டேரி, பாகூர் ஏரி, வேல்ராம்பட்டு ஏரி, கனகன் ஏரி, கிருமாம்பாக்கம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் முதலியார்பேட்டை உழந்தை ஏரியும் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஏரி 105.2 ஏக்கர் பரப்பளவை கொண்டது. மழைக்காலங்களில் சங்கராபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வரும்போது பிள்ளையார்குப்பம் படுகை அணையில் இருந்து மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு அந்த தண்ணீர் பத்துக்கண்ணு, அகரம், உளவாய்க்கால், வில்லியனூர் வழியாக உழந்தை ஏரிக்கு செல்லும்.
பிறகு உழந்தை ஏரி நிரம்பிய பின்னர் பிள்ளையார்குப்பம் மதகு மூடப்படும். இந்நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் புதர்மண்டி தூர்வாரப்படாமல் கிடந்ததால் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்து வற்றிப்போனது. இதனால் ஏரி முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்தது. இதனை 2016ம் ஆண்டு அப்போதைய கவர்னர் கிரண்பேடியின் முயற்சியால் ஏரியில் இருந்த சீமை கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டது. அதன்பின்னர் ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. பிறகு அருகில் உள்ள வேல்ராம்பட்டு ஏரிக்கும், உழந்தை ஏரிக்கும் இடையே பாலம் கட்டப்பட்டு 2 ஏரிகளும் இணைக்கப்பட்டது.
தற்போது உழந்தை ஏரியின் கரை பலவீனமடைந்து அதன் ஆழம் குறைந்து நீர்ப்பிடிப்பின் கொள்ளளவும் குறைந்துவிட்டது. இதனால் தற்போது மழைக்காலங்களில் சேமிக்கப்படும் தண்ணீர் கோடைக்காலத்துக்குள் வற்றி ஏரி வறண்டு விடுகிறது. ஆகையால் இந்த ஏரியை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் அரசு சார்பில் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக வருவாய்த்துறை சார்பில் ஏரியில் உள்ள வண்டல் மண்ணை தூர்வாரி அந்த மண்ணை தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்தாண்டு ஏரியின் சில பகுதிகளை தூர்வாரி அந்த வண்டல் மண்ணை வெளியே எடுத்து சென்று விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே இந்தாண்டு மீண்டும் ஏரியை தூர்வார வருவாய்த்துறை மூலம் பர்மீட் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பர்மீட்டுக்கு ரூ.1,000 வருவாய்த்துறைக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதனை பயன்படுத்திக்கொண்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சிலர் 100, 200, 500 என பர்மீட்டுகளுக்கு பணம் செலுத்தி அனுமதி வாங்கி வைத்துள்ளனர். இதனால் தினமும் ஏரியில் இருந்து பொக்லைன் மூலம் 3 அடி ஆழத்துக்கு மேல் மண் எடுக்கப்பட்டு டிப்பர் லாரிகளில் ஏற்றி செல்லப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 500 டிப்பர் லாரிகளுக்கு மேல் மண் எடுத்து செல்லப்படுகிறது.
இந்த மண்ணை டிப்பர் லாரி உரிமையாளர்கள் ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர். இதற்கிடையே மண் எடுக்கும் இடத்தில் ெபாதுப்பணித்துறை சார்பில் கணக்ெகடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள், வருவாய்த்துறையின் பர்மீட்டுக்கு ேமல் தனியாக பணம் வாங்கி ெகாண்டு மண்ைண லாரியில் ஏற்றி அனுப்புகின்றனர். இதனால் அரசுக்கு கிடைக்க ேவண்டிய வருவாயும் கிடைக்காமல் போய்விடுகிறது.
தற்போது ஏரி ஆழப்படுத்தப்படுகிறதே தவிர அதன் கரைப்பகுதி வலுவிழுந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிகளவில் தண்ணீர் பிடித்தாலும் கரைப்பகுதி பலவீனமடைந்துள்ளால் அவை உடைந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்படும். ஆகவே ஏரியை தூர்வாரும் மண்ணை ஏரியை சுற்றி கொட்டி கரைப்பகுதியை பலப்படுத்தி மரக்கன்றுகள் நட வேண்டும். ஏரியை சுற்றிலும் சாலை அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் சாலை அமைத்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஏரியின் கொள்ளளவு அதிகரிக்கும். கரையின் பலம் கூடும். ஊசுட்டேரி போன்று பறவைகள் அதிகளவில் வந்து இயற்கையின் அழகை அலங்கரிக்கும்.
தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்தாமல் ஏரியில் இருந்து மண்ணை கொள்ளையடித்து செல்கின்றனர். தற்போது ஏரியில் இருந்து எடுக்கப்படும் மண்ணை கரைப்பகுதிகளில் கொட்டினாலே அந்த மண் போதாது. ஆனால் மண்ணை வெளியே எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். எனவே புதுவையின் நீராதாரமாக விளங்கும் உழந்தை ஏரியில் இருந்து எடுக்கப்படும் மண்ணை விற்பனை செய்யாமல் கரைப்பகுதியில் கொட்டி கரையை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லையென்றால் எதிர்காலத்தில் கரையை பலப்படுத்த வெளியில் இருந்து மண் வாங்கி வந்து கொட்ட வேண்டிய நிலை ஏற்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக செலவு ஆகும் நிலை உருவாகும். எனவே ஏரியில் இருந்து எடுக்கப்படும் மண்ணை வெளியில் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘‘பனை மரங்கள் சேதம்’’
ஏரியில் ஏராளமான டிப்பர் லாரிகள் மண் ஏற்றிக்கொண்டு தினமும் ஏரிக்கரையின் மீது சென்று வருகிறது. இதனால் கரைப்பகுதி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கரைப்பகுதியில் பல ஆண்டுகளாக நீராதாரமாக இருக்கும் பனை மரங்கள் அனைத்தும் சேதமடைந்து வருகிறது. இதனை சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. எனவே பனை மரங்களை பாதுகாக்க ஏரியில் இருந்து எடுக்கப்படும் மண்ணை கரைப்பகுதியில் கொட்டி மரங்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
