நித்திரவிளை : கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி ஊராட்சிக்குட்பட்ட நெய்தவிளை பகுதியில் இருந்து சூழால், ஊரம்பு, கருக்குழி போன்ற பகுதிகளுக்கு நடந்து செல்ல சுமார் 7 அடி அகலத்தில் பாதை உள்ளது. இந்த பாதையை ஏராளமான பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதையை ஒட்டி இருந்த சுற்றுச்சுவர் இடிந்து பாதையில் விழுந்துள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவோ, பைக்கில் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதையில் விழுந்து கிடக்கும் ஹோலோ பிளாக் கட்டிகளை அகற்றுமாறு பொதுமக்கள், தனியார் நிலத்தின் உரிமையாளரிடம் பலமுறை கூறிய பிறகும் சம்பந்தப்பட்ட நபர் பாதையில் விழுந்து கிடக்கும் ஹாலோ பிளாக் கற்களை அகற்றாமல் இருந்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். போலீசார் ஹாலோ பிளாக் கற்களை அகற்றுமாறு அறிவுறுத்திய பிறகும் நிலத்தின் உரிமையாளர் ஹோலோ பிளாக் கட்டிகளை அகற்றவில்லையாம்.இது சம்பந்தமாக 112 அவசர சேவைக்கு அழைத்து கூறிய பிறகும் அவர்களும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். ஆகவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள பாதையில் விழுந்து கிடக்கும் ஹாலோ பிளாக் கற்களை அகற்ற கிள்ளியூர் தாசில்தார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
