முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கீழக்கரை-புதுக்குடி சாலையில் மூடப்பட்ட அபாய பள்ளம்: பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

 

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கீழக்கரை முதல் தொண்டியக்காடு புதுக்குடி பள்ளி வரை செல்லும் சாலை என்பது சுமார் 6 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையாகும்.இந்த சாலையின் ஓரம் கிழக்கு பகுதி வயல்வெளிகள் தென்னந்தோப்புகள் நிறைந்தும் மறுபுறம் மேற்கு சாலையோரம் கிளைதாங்கி ஆறும் செல்கிறது. இந்த சாலை தில்லைவிளாகம் மற்றும் தொண்டியக்காடு மட்டுமின்றி சுற்று பகுதி கிராம மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாகும். இந்த சாலை வழியாகத்தான் தொண்டியக்காடு முதல் இடைப்பட்ட கிராம மக்கள் வரை முத்துப்பேட்டைக்கும் அதன் தொடர்ச்சியாக உள்ள பல்வேறு வெளியூர்களுக்கும் சென்று வருகின்றனர்.

அதேபோல் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் பல்வேறு வேலைகளுக்கு செல்லும் விவசாய கூலித்தொழிலாளர்கள் சென்று வரும் முக்கிய சாலையாகும். மேலும் இந்த சாலை வழியாகத்தான் கல்லூரி வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் எந்தநேரமும் சென்று வருகிறது. இப்படி ரம்மியமான சூழல் நிறைந்த இந்த சாலை தற்போது ஜல்லிகள் பெயர்ந்து தற்போது கரடுமுரடான சாலையாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. பல இடங்களில் பள்ளம் படுங்குழியாக மாறியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் தில்லைவிளாகம் சுடுகாடு அருகே சாலையின் நடுவே சில தினங்களுக்கு முன் திடீரென்று பெரிய பள்ளம் ஏற்பட்டது.

இதனால் சாலையில் உள்ள இந்த பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து பாதிக்கப்பட்டு வந்தனர். நடந்து செல்பவர்கள் கூட இதில் விழுந்து காயம் பட்டு வந்தனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் பொதுமக்களும் தினமும் சிரமத்திற்கு உள்ளாகினர். அடிக்கடி சேதமான சாலையால் விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த பகுதி வழியே பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் தினமும் அச்சதுடன் பயணம் செய்து வருகின்றது.

பெரிய விபத்து ஏற்படும் முன் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமான சாலையை புதிதாக செப்பனிட வேண்டும். இந்த சாலையின் மேற்கு புறமாக கிளைதாங்கி ஆறு செல்கிறது. சாலையின் ஓரத்தில் மண் அரிப்பும் ஏற்படுகிறது. அதேபோல் இந்த சாலையோரம் தேவையான இடங்களில் சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்படாத வகையில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக கடந்த 7ந்தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நேற்றுமுன்தினம் முதல்கட்டமாக தில்லைவிளாகம் சுடுகாடு அருகே சாலையின் நடுவே இருந்த ஆபத்தான பள்ளத்தை சிமெண்ட் கலவை கொண்டு நிரப்பி மூடி சரி செய்யப்பட்டது. ராட்சத பள்ளத்தை தற்காலிகமாக சரிசெய்த தில்லைவிளாகம் ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு தொண்டியக்காடு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: