பிச்சம்பட்டி கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் அருகே குடிநீர் குழாய்: தொற்றுநோய் பரவும் அபாயம்

 

ஆண்டிப்பட்டி : ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் ஒட்டி அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியம் பிச்சம்பட்டி கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். இக்கிராமத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு தனித்தனியாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும், பொதுமக்களின் வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராமத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் பொதுக் குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிச்சம்பட்டி கிராமத்தின் நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. பொதுமக்கள் இந்த குழாயில் குடங்களை வைத்து எளிதாக தண்ணீர் பிடிப்பதற்காக, ஊராட்சி சார்பில் சிறிய அளவிலான தடுப்புத் திட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கழிவுநீர் வாய்க்கால் மிக அருகில் இருப்பதால், அதிலிருந்து வெளியேறும் அசுத்த நீர், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் அந்தத் திட்டுப் பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, ஈ மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, குடிநீர் குழாய் அடியில் கழிவுநீர் தேங்குவதால், குடிநீருடன் அசுத்த நீர் கலந்து விநியோகிக்கப்படும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.‌ இந்த தண்ணீரைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்குப் பல்வேறு தொற்றுநோய்கள் மற்றும் ஒவ்வாமை ஏற்படும் அச்சமும் உருவாகியுள்ளது.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், கழிவுநீர் வாய்க்கால் அருகே குடிநீர் குழாய் இருப்பதால் தண்ணீரைப் பயன்படுத்தவே பயமாக இருக்கிறது. இது தொடர்பாக பிச்சம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

எனவே, பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கழிவுநீர் வாய்க்கால் அருகே இருக்கும் இந்த குடிநீர் குழாயை உடனடியாக வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும், அல்லது கழிவுநீர் வாய்க்காலில் இருந்து குடிநீர் குழாயை சற்று உயரமான பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும் என பிச்சம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: