திருத்துறைப்பூண்டி : கடந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய நேரத்தில்(ஜூன்12ம் தேதி) திறக்கப்பட்ட நிலையில் திருத்துறைப்பூண்டி விவசாயிகள் குறுவை சாகுபடியினை ஆண்டுதோறும் அதிகப்படுத்தி இருந்தனர். கடந்த ஆண்டு குறுவை 19,238 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து இருந்தனர். குறுவை அறுவடை முடிந்த பிறகு, 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படுவது போல இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதியளவு தண்ணீர் இல்லாத காரணத்தால் ஜூன் 12ம்தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.
ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடும்பலம், எழிலூர், ஆட்டூர், பாமணி, கொக்காலாடி, மணலி, வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்கு வயலை டிராக்டர் கொண்டு உழவு செய்தனர்.
அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க முடியாது என்கிற அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஒரு மாத காலமாக தண்ணீர் திறக்கப்படாத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்து போனது. இந்நிலையில் சம்பா சாகுபடிக்காக தங்களது நிலங்களை உழவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், சம்பா சாகுபடிக்காவது உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுமா? என்று கேள்வியும் விவசாயிகள் மத்தியில் கவலையுடன் எழுந்துள்ளது. சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
