தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் ரூ.40 லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சாலியமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுமை தூக்கும் தொழிலாளர்களின் மேற்பார்வையாளர் மோகன்ரவி என்பவரிடம் 6,850 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
போலீசார் வருவதை பார்த்த பணியாளர்கள், தொழிலாளர்கள் லஞ்ச பணத்தை தூக்கி வீசினர். இதில் கேட்பாரற்று கிடந்த ரூ.6,030 பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்த பட்டியல் எழுத்தர் தினகரனிடம் எவ்வளவு மூட்டை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என விசாரணை நடத்தினர். சுமை தூக்கும் பணியாளர்கள் தற்காலிக பணியாளர்கள் என்பதால் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்திட பரிந்துரை செய்தனர்.
* ஓசூர் ஆர்டிஓ செக்போஸ்ட்டில் ரூ.1.77 லட்சம் பறிமுதல்
ஓசூர்- பாகலூர் சாலை, நல்லூர் செல்லும் பிரிவு பாதை அருகில் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி வழியாக கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில், 8க்கும் மேற்பட்ட போலீசார் சோதனைச்சாவடிக்கு வந்தனர்.
அவர்கள் திடீரென அங்கு சோதனை மேற்கொண்டனர். காலை 9.30 மணி வரை சோதனை நீடித்தது. அப்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபுராம் திவாகர் பணியில் இருந்தார். இந்த சோதனையில், அங்கிருந்த கணக்கில் வராத ரூ.1.77 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
