டெண்டருக்கு விண்ணப்பிக்க 30 நிமிடம் மட்டுமே அவகாசம்: பிடிஓ உட்பட 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கக்கோட்டுத்தலை ஊராட்சிக்கு உட்பட்ட குன்னத்துகுளம் பகுதியில், கிராம நிர்வாக அலுவலகம் அருகில் ‘மினி சமூக சுகாதார வளாக கழிப்பறை’ கட்டுவதற்கு ரூ.4 லட்சத்து 83 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்னணு வைப்புத் தொகையாக ஒப்பந்ததாரர்கள் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை ரூ.4 ஆயிரத்து 830. இது ஒரு திறந்தநிலை ஒப்பந்தப்புள்ளி முறையாகும்.

ஒப்பந்தப் படிவங்களை ஜூலை 8 மாலை 4 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள், ஜூலை 13 மதியம் 3 மணி எனவும், விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூலை 13 மாலை 3.30 மணி எனவும், டெண்டர் திறக்கப்படும் நேரம் ஜூலை 13 மாலை 4 மணி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே.

பொதுவாக அரசு டெண்டர்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 7 முதல் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். வெறும் 30 நிமிடங்களில் ஒரு ஒப்பந்ததாரர் அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் பதிவேற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. இது ஒரு குறிப்பிட்ட நபருக்கு சாதகமாக செய்யப்பட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. வெளிப்படைத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.

இந்த டெண்டரில் விண்ணப்பிக்க வழங்கப்பட்டுள்ள 30 நிமிட அவகாசம் என்பது மிகப்பெரிய விதிமீறலாகும். இதுகுறித்து எழுந்த புகாரை அடுத்து, மாவட்ட கலெக்டர் பிரதாப் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் ஏ.சுசீலா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கே.தங்கராஜ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

 

Related Stories: