மதுராந்தகம்: மதுராந்தகம் நகரில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ரூ.1.85 கோடி மதிப்பிலான கால்வாய் பணி முடங்கியுள்ளது. பருவ மழை தொடங்கும் முன் பணிகளை முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி 24 வார்டுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நகராட்சியில் ஹாஸ்பிடல் ரோடு, தேரடி சாலை, பார்த்தசாரதி சாலை ஆகிய மூன்று சாலைகள் முக்கிய பிரதான சாலைகளாக உள்ளது. அதில் பார்த்தசாரதி சாலையில் பள்ளி, மீன் மார்க்கெட், திரையரங்குகள் ஆகியவை உள்ளது. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்த சாலையோரம் மதுராந்தகம் ஏரியின் பாசன கால்வாய் செல்கிறது.
பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததாலும், அந்த தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாலும் இந்த கால்வாய் தூர்ந்து போனது. இதனால் விவசாய நிலங்களின் பாசனத்திற்கு தண்ணீர் செல்வது பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தடைபட்டது. அந்த சாலையில் உள்ள குடியிருப்புகளின் கழிவு நீரும், மழைக்காலங்களில் மழை நீரும் செல்கிறது. அதுவும் பல இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக உள்ளதால் இடையிடையில் கழிவுநீரும் மழை நீரும் கால்வாய் அருகில் உள்ள வீட்டு மனைகளிலும், வேறொரு கால்வாயிலும் மாறிமாறி செல்கிறது. இதனால் இந்த கால்வாயில் பல இடங்களில் குப்பைகள் நிறைந்து தண்ணீருடன் துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்நிலையில் இந்த கால்வாயை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் 1.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 820 மீட்டர் அளவிற்கு கான்கிரீட்டால் கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டது. சில இடங்களில் கால்வாய் கட்டுமான பணிகளும் நடைபெற்ற வந்தது. ஆனால் கால்வாயில் ஆக்கிரமிப்பு காரணமாக கட்டுமான பணிகள் நடைபெறாமல் முடங்கிக் கிடக்கிறது. இதனால் கால்வாயில் பல இடங்களில் தண்ணீர் செல்ல முடியாமல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தண்ணீரும் ஆங்காங்கே குட்டை போன்று தேங்கியுள்ளது.
எனவே பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அளவீடு செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள்
நகரின் பிரதான சாலையான பார்த்தசாரதி தெருவிலுள்ள கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து பல மாதங்கள் ஆகியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால் கால்வாய் கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நின்று போயுள்ளது.
நீண்ட நாள் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை
மதுராந்தகம் நகரின் முக்கிய சாலையாக திகழும் இந்த சாலையில் உள்ள ஏரி பாசன கால்வாய் மீது சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு பல தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மாற்று இடம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கால்வாய் அமைத்தால் வளர்ச்சி பெறும்
ரூ.1.87 கோடி மதிப்பில் புதிதாக கால்வாய் அமைத்தால் சாலை விரிவாக்கம் செய்யப்படும், போக்குவரத்து தடையின்றி நடைபெறும், வணிக ரீதியான கட்டிடங்கள் உருவாகி மதுராந்தகம் வளர்ச்சி பெறும் என்று கூறப்படுகிறது.
மின் கம்பங்களால் பணி பாதிப்பு
பாசன கால்வாயின் ஓரங்களில் மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்களாலும் புதிய கால்வாய் கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்துறை ஒத்துழைத்தால் மட்டுமே இந்த கால்வாய் பணி விரைந்து முடிவடையும்.
