சேத்துப்பட்டு பேரூராட்சியில் நிர்வாக மாற்றத்தால் வீடு கட்டும் நிதியுதவி திட்ட பணிகள் முடக்கம்

*கள ஆய்வு செய்வதில் அதிகாரிகள் மெத்தனம்

சேத்துப்பட்டு : திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நூற்றுக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்களின் நீண்ட நாள் கனவாக இருப்பது ஒரு சொந்த வீடாகும்.

மத்திய, மாநில அரசுகள் ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் கலைஞர் கனவு இல்லம், பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டம், அம்மா வீடு என கிராமப்புற நகர்ப்புற மக்களுக்கு வீடுகளை வழங்கி வந்தது.

பேரூராட்சிகளை பொறுத்தவரை மனுக்கள் பெறப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. பேரூராட்சிகளில் கடந்த ஆட்சி காலத்தில் மத்திய அரசு திட்டம் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டம் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வீடுகள் வழங்கப்பட்டு கட்டப்பட்டன.

இதற்கு முன்பு பேரூராட்சிகளில் சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் வீடு கட்ட நிதியுதவி வழங்கும் திட்டம், உள்ளூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதனால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஒப்புதல்களையும், தவணைப் பணத்தையும் எளிதாகப் பெற்று வந்தனர்.

ஆனால் இத்திட்டம் தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு (முன்னாள் குடிசை மாற்று வாரியம்) மாற்றப்பட்டுள்ளது. இந்த நிர்வாக மாற்றத்திற்குப் பிறகு, அதிகாரிகள் கள ஆய்வு செய்வதிலும், தவணைத் தொகையை விடுவிப்பதிலும் கடுமையான மெத்தனப் போக்கு நிலவுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமப் புறங்களில், வீடு கட்டும் திட்டப் பணிகள் (கலைஞர் கனவு இல்லம், பி.எம்.ஏ.ஒய் கிராமப்புறம்) உள்ளூர் அதிகாரிகள் மூலம் மிகச் சுலபமாக நடைபெறுகின்றன.

ஆனால், பேரூராட்சிகளில் மட்டும் ஏன் இவ்வளவு சிரமமாக உள்ளது எனத் தெரியவில்லை. அதிகாரிகள் போன் செய்வதைக் கூட எடுப்பதில்லை. சொந்த வீடு கட்டுவது பெரும் வேதனையாக மாறிவிட்டது என ஆதங்கப்பட்டனர்.

பேரூராட்சி கட்டுப்பாட்டில் இல்லாததால், பொதுமக்கள் தங்களின் குறைகளைக் கூறக் கூட மாவட்டத் தலைநகரங்களுக்கு அலைய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இது தொடர்பாக முழுமையான கள ஆய்வு நடத்தி, இத்திட்டத்தை மீண்டும் உள்ளூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்கே திட்டத்தை கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘டிஜிட்டல் மயம், நிர்வாகச் சீர்திருத்தம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்த மாற்றம் ஏழை மக்களைத்தான் அதிகம் பாதித்துள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று, அரசாங்கம் இத்திட்டத்தை மீண்டும் பேரூராட்சி வசம் ஒப்படைக்கவேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

Related Stories: