அயோத்தியில் நன்கொடை பணம் திருட்டை கண்டித்து ராமர் கோயில் பாதுகாப்பு போராட்டம்: உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை பணம் திருடப்பட்டதற்கு பாஜ தான் காரணம் என்றும் இதை கண்டித்து ராமர் கோயில் பாதுகாப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சிவசேனா ( உத்தவ்) கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். சிவசேனா (உத்தவ்) கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை பணம் திருடப்பட்டதற்கு பாஜ தான் காரணம். இதற்கு கண்டனம் தெரிவித்தும் ராமர் கோயிலை காப்பாற்ற வலியுறுத்தி நாளை முதல் ராமர் கோயில் பாதுகாப்பு போராட்டம் நடத்தப்படும். நாளை தாதரில் உள்ள அனுமார் கோயிலில் எல்லோரும் கூடுவோம். அப்போது அனுமன் சாலிசா பாடப்படும். எல்லோரும் இதில் கலந்து கொண்டு பாஜ தான் அயோத்தி நன்கொடை திருட்டுக்கு காரணம் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் பாஜ இதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

ராமர் கோயிலை கட்டுவதற்கான இயக்கத்தில் பிளவுபடாத சிவசேனாவினர் ஏராளமானோர் பங்கேற்றனர். கரசேவகர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதனை பாஜ அரசியல் ரீதியாக பயன்படுத்தி அதிகாரத்தை அனுபவிக்கிறது. பாஜ எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துகிறது. எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் குதிரை பேரம் நடத்திக்கொண்டிருக்கிறது. இந்துத்துவம் என்ற பெயரால் கொள்ளை அடிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

Related Stories: