கொல்கத்தா: தேர்தல் ஆணையத்திடம் கட்சி பெயர், சின்னத்திற்கு உரிமை கோரிய மறுநாளே திரிணாமுல் தலைமை அலுவலகத்தை ரிதாப்ரதா குழுவினர் கைப்பற்றினர். மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதிருப்தி தலைவர் ரிதாப்ரதா தலைமையில் 60 எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்தனர். அவர்களுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று தேர்தல் ஆணையத்திடம் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கான உரிமையை ேகாாி மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவுக்கு ஜூலை 6ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க மம்தா மற்றும் அதிருப்தி தலைவர் ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான குழுவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
. இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள கட்சியின் அமைப்பு ரீதியான தலைமையகத்தை ரிதாப்ரதா தலைமையிலான குழுவினா் நேற்று கைப்பற்றினர். கொல்கத்தா ஈஎம் பைபாஸில் இருந்த கட்சியின் தலைமை அலுவலகம் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மாற்றப்பட்ட பிறகு, 2022 முதல் ‘மெட்ரோபாலிட்டன்’ பகுதியில் உள்ள அலுவலகமே கட்சியின் செயல்பாட்டுத் தலைமையகமாகத் திகழ்ந்து வருகிறது.
மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவினருடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வளாகத்திற்குள் நுழைவதன் மூலம் தங்கள் அமைப்பு ரீதியான அங்கீகாரத்திற்கான உரிமையை வலுப்படுத்த அதிருப்தியாளர்கள் முயன்றனர். அதிருப்தி அணியில் உள்ள பிர்ஹாத் ஹக்கீம், ஜாவேத் கான், சந்தீபன் சாஹா மற்றும் அக்ருஸ்ஸமான் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் அலுவலகத்திற்குச் சென்ற ரிதாப்ரதா, அங்கு ஒரு கூட்டத்தை நடத்தினார். மேலும் தனது தரப்பினரே உண்மையான திரிணாமுல் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் வலியுறுத்தினார்.
