புதுடெல்லி: டெல்லி-டேராடூன் விரைவு சாலையில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்ட நிலையில், அதில் பணியாற்றிய இன்ஜினியர் மற்றும் திட்ட மேலாளரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. டெல்லி, உபி மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் ரூபாய் 12,000 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில், 213 கிமீ தூரம் உடைய டெல்லி-டேராடூன் 6 வழிச்சாலை விரைவு சாலை(எக்ஸ்பிரஸ்வே) உருவாக்கப்பட்டது. பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் கட்டப்பட்ட இந்தச் சாலையை கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆனால், இந்தச் சாலை திறக்கப்பட்டு பின் பெய்த முதல் மழைக்கே சாலையின் பல்வேறு இடங்களில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சாலையில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்ட பள்ளங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பிரதமர் திறந்து வைத்த ஒன்றரை மாதத்திலேயே ரூ.12,000 கோடி மதிப்பிலான சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது, இந்த சாலை கட்டுமானத்தில் நடந்துள்ள இமாலய ஊழலையும், முறைகேட்டையும் காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஒரு இன்ஜினியர் மற்றும் திட்ட மேலாளரையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(என்எச்ஏஐ) சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும்,திட்ட இயக்குனர்,காண்ட்ராக்டர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என என்எச்ஏஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சம்பவத்தினத்திற்கு முந்தைய நாள் இரவு பெய்த கனமழையினால் நீர் தேங்கியது தான் ராட்சத பள்ளத்துக்கு காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
