கடலூர்: மேகாதது அணை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு அன்புமணி கண்டனம் தெரிவிப்பாரா? என காங்கிரசில் எம்பியாக உள்ள அவரது மச்சான் விஷ்ணு பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று தர்மபுரியில் அளித்த பேட்டியில், ‘அந்தமான் நிக்கோபார் தீவுகளில், தி கிரே நிக்கோபார் புராஜக்ட் என்ற திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். இந்த திட்டம் வந்தால் மரங்கள் வெட்டப்படும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
இதேபோல், மேகதாது அணை கட்ட திட்டமிட்டுள்ள இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதாலும் கர்நாடக முதல்வர் சிவக்குமாரிடம் பேசி இந்த திட்டத்தை ராகுல்காந்தி நிறுத்த வேண்டும்’ என்றார். இதற்கு அன்புமணி மச்சானும் (சவுமியாவின் தம்பி), கடலூர் காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொடக்கம் முதலே தொடர்ந்து கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது.
எந்த ஒரு தருணத்திலும் ராகுல் காந்தி மேகதாது அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதோ, ஆதரவு தெரிவித்ததோ இல்லை. அப்படியிருக்க, அந்தமான்-நிக்கோபர் விவகாரத்தையும் மேகதாது அணை விவகாரத்தையும் தொடர்பில்லாமல் ஒன்றாக இணைத்து, எங்களது தலைவரைக் குறிவைத்து பேசுவதை கடுமையாக கண்டிக்கிறோம். குறிப்பாக, நான் அன்புமணியிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். மேகதாது அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கின்ற நிலையில், அதை தடுக்க தவறிய ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பாரா?.
ராகுல் காந்தி கர்நாடக அரசிடம் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட கூற வேண்டும் என்று சொல்கின்ற அன்புமணி, மோடியிடம் கூறி மேகதாது அணை கட்டக் கூடாது என்று கர்நாடக பாஜவை ஒரே ஒரு தீர்மானம் கொண்டு வர சொல்வதற்கு துணிவு இருக்கிறதா?. மோடியை திருப்திப்படுத்த இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எங்கள் தலைவர் மீது வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது அரசியல் நாகரிகம் அல்ல. அரசியல் தலைவர்கள், வன்முறையையோ பதற்றத்தையோ தூண்டும் வகையில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.
