வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சிக்குட்பட்ட ஏரி கொல்லை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் மோவிதா(16). அருகே உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற மோவிதா மாலை வழக்கம்போல் வீட்டுக்கு வரவில்லை. பெற்றோர் வீட்டின் அருகே தேடியபோது கொட்டகையில் மாணவி மோவிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
சடலத்தை மீட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் இரவோடு இரவாக அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மாணவியின் உடலை எரித்துள்ளனர். தகவலறிந்த விஏஓ காசிநாதன் நேற்று காலை அம்பலூர் போலீசில் புகார்அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவியன் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மாணவி படித்த பள்ளி உள்ளிட்ட இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் தந்தை கோவிந்தசாமி மீது வழக்குப்பதிந்து மாணவி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
