தமிழகத்தில் அடுத்தடுத்து விபத்து: ஒரே நாளில் 16 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 16 பேர் பலியாகினர்.அதுபற்றிய விவரம் வருமாறு: மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (63). இவரது மகன் பிரவீன் (30). ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருக்கு சென்னையில் பெண் பார்ப்பதற்காக நேற்று குடும்பத்துடன் காரில் அதிகாலையில் புறப்பட்டனர். உறவினர் செல்லப்பாண்டி(55 காரை ஓட்டிச் சென்றார். செல்வம், அவரது மனைவி செல்வி(55) மற்றும் உறவினர் கவிதா(52) உள்ளிட்ட 5 பேர் சென்றனர்.

விழுப்புரம் அருகே பிடாகம் என்ற இடத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதியது. இதில் செல்லப்பாண்டி, செல்வம், கவிதா ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். செல்வி, பிரவீன் ஆகியோர் படுகாயமடைந்தனர். உளுந்தூர்பேட்டை: மதுரை மாவட்டம் மண்டபம் பகுதியில் வசிப்பவர் ஹேமலதா (53) நேற்று இவர், மகள் ஸ்ரீதாரணி (21), தாய் ராணி (73), சகோதரி சுஜாதா (51), இவரது மகன்கள் வெற்றிவேல் (25), சக்தி (எ) ஸ்ரீதரன் (21) ஆகிய 6 பேரும் காரில் ஹேமலதாவின் மகன் ஹரிஷை வெளிநாடு அனுப்பி வைப்பதற்காக சென்னை விமான நிலையம் சென்றுவிட்டு மதுரை திரும்பி கொண்டிருந்தனர்.

காரை சக்தி ஓட்டியுள்ளார். நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி அருகே சக்தி தூக்க கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதியது. இதில் வெற்றிவேல், சக்தி, சுஜாதா ஆகிய மூவரும் உயிரிழந்தனர். ராணி, ஹேமலதா, ஸ்ரீதாரணி ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தந்தை, மகள் சாவு: நாமக்கல் மாவட்டம், பாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (43), பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர், மனைவி கார்த்திகா (35), மகள் அஸ்விகா (15), மகன் ஸ்ரீவசந்த் (8) ஆகியோருடன் நேற்று முன்தினம் திருவண்ணாமலை கோயிலுக்கு காரில் சென்று விட்டு, பெங்களூரு திரும்பி கொண்டிருந்தார். அதிகாலையில், திருவண்ணாமலை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மத்தூர் அருகே, சோனாரஅள்ளி என்ற இடத்தில் வந்தபோது, அரிசி லோடு லாரி மோதியதில் மோகன், அஸ்விகா ஆகியோர் பலியாகினர். மற்ற இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சங்கரன்கோவில்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பரமசிவன் (40). ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மங்காபுரம் இந்து நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று தனது உறவினர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பாரதி (20) என்பவருடன் பைக்கிலும், பரமசிவன் (44), அவரது மனைவி பொன் கிளி (42), உறவினர் மகள் சந்தியா (20) ஆகியோர் மற்றொரு பைக்கிலும் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்த கார் 2 பைக்குகள் மீது மோதியது. இதில் ஆசிரியர் பரமசிவன், செல்வபாரதி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு பரமசிவன், பொன் கிளி, சந்தியா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

ராசிபுரம்:சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சுகனேஸ்வரன்(25), முத்தமிழ்(25). நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு, ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர் கேட் பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு சென்ற ஆம்னி பஸ் ராசிபுரம் அருகே முத்துக்காளிப்பட்டி பிரிவு சாலை அருகே, பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் உயிரிழந்தனர்.

பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி மலைப்பாதை வழியாக நேற்று கர்நாடகா மாநிலம் பங்காருப்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகன் பாலாஜி (32), மகள் அனுஷ்கா (13) ஆகிய இருவரும் பைக்கில் பேரணாம்பட்டில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, பத்தலப்பல்லி தமிழ்நாடு- ஆந்திரா எல்லை வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒடிசாவில் இருந்து மாட்டு தோல்களை பேரணாம்பட்டுக்கு ஏற்றி வந்த கனரக லாரி இவர்களின் பைக் மீது மோதியது. இதில் இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மந்திரி ஓடையை சேர்ந்தவர் மாரிமுத்து (38). இவர் நேற்று டூவீலரில், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டு, மீண்டும் காரியாபட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், தூத்துக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார், இவரது டூவீலர் மீது எதிர்பாராத வகையில் மோதியது. இதில் மாரிமுத்து, சவுமியா (10) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவரது மனைவி சத்யா (30), மற்றொரு மகள் தனியாஸ்ரீ (7) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

Related Stories: