திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: ஆகஸ்ட் 17ல் தமிழர் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. எங்கு நடைபெறும் என விரைவில் அறிவிக்கப்படும். நாங்கள் 35 வருடமாக தமிழ் தேசியம் பற்றி பேசி வருகிறோம். எங்களின் 5 முதன்மை முழக்கங்களில் ஒன்று தமிழ் தேசியம், சாதி ஒழிப்பு, பாட்டாளி மக்கள் விடுதலை, மகளிர் விடுதலை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதுதான். ஏராளமான தமிழ் தேசிய கருத்தரங்குகளை மாநாடுகளை நடத்தி உள்ளோம். அடுத்த பாய்ச்சலாகத்தான் தமிழ் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பவர் முதல்வரின் நம்பிக்கைக்குரியவர். அந்த பொறுப்பு ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பல்ல. ஆகவே அந்த பொறுப்பை முதலமைச்சர் தனக்கு நம்பிக்கைக்கு உரிய ஒருவருக்கு வழங்கி உள்ளார். அது உட்கட்சி விவகாரம்; அரசு பதவி இல்லை. அதை முடிவெடுக்கும் அதிகாரம் கட்சி தலைவருக்கு உள்ளது. எல்லா மாநிலத்திலும் கஞ்சா போன்ற போதை பொருட்கள், போதை மாத்திரைகள், மது போன்ற அனைத்தும் பெரிய அளவில் புழக்கத்தில் உள்ளது கவலை அளிக்கிறது.
மதுவிலக்கு என்பது மாநில அரசின் அதிகாரத்தில் இருந்தாலும் கூட தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு முன்பாக திமுக தலைமையிலான கூட்டணியை உடைக்க பலர் முயற்சி செய்தார்கள். என்னை வைத்தும் அந்த முயற்சி நடந்தது. ஆனால் நான் அதற்கு உடன்படவில்லை. தேர்தலுக்கு பின்பு திமுக கூட்டணியை பாதுகாக்கும் வலிமை எனக்கு கிடையாது. மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய முதலமைச்சர் விஜய் தெரிவித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியது குறித்து நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
