கோவை: கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: மேகதாது விவகாரத்தில் பாஜ மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது காவிரி பிரச்னையை பேசி தீர்த்து இருக்க வேண்டும். எல்லோரும் நேரடியாக பேச வேண்டும், சட்டரீதியாக பேச வேண்டும் என இரு விதமான கருத்துக்கள் சொல்கின்றனர். இதில் எது சரியாக இருக்கும் என்பதை முதல்வர் முடிவு செய்வார் என தெரிவித்தார்.
திரைப்பட தயாரிப்பாளரும் நாட்டின் குடிமகன் தானே, தமிழக முதல்வர் என்ன நினைக்கிறாரோ அந்தக் கருத்துக்களை தான் அவர் வெளியிட முடியும். முதல்வர் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் டெல்லி பிரதிநிதி செய்ய முடியுமே தவிர வேறு கருத்துக்களை அவரால் சொல்ல முடியாது. ஒருவரை தேர்வு செய்த உடனே அவருக்கு தகுதி இருக்கின்றதா? இல்லையா? என சொல்லிவிட முடியாது. சினிமா பாணியல் அரசின் செயல்பாடுகள் என்ன இருக்கின்றது. முதல்வர் சொன்ன கருத்தில் ஏதாவது முரண்பாடு இருக்கின்றதா?. சட்டமன்றத்தில் செய்கை செய்தது வேறு.
மற்றவர்கள் செய்யாததையா செய்தார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எந்த கேள்விகள் வேண்டுமானாலும் கேட்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். தவெக செய்வது குதிரை பேரம் என வானதி சீனிவாசன் குற்றம் சாட்டி இருப்பது குறித்த கேள்விக்கு, ‘‘ஒன்றிய அரசும் குதிரை பேரம் செய்திருக்கின்றது.
மகாராஷ்டிராவில் பாஜவினர் ஒரு அரசாங்கத்தையே திருப்பி போட்டார்கள். ஒரு இயக்கத்தை வளர்க்கின்ற போது நல்ல நடைமுறைகளை பின்பற்றி வருவதை வரவேற்க வேண்டும். குதிரை பேரம் என்பது வார்த்தை ஜாலம் தானே தவிர வேறு எதுவும் இல்லை. ஆறு மாதம் முன்பு நான் ராஜினாமா செய்து விட்டு தவெக வந்தேன். இப்போது மந்திரியாக இருக்கின்றேன்’’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
* மருத்துவக்கல்லூரி விண்ணப்பம் அளித்தது பற்றி நிரூபிக்காவிட்டால் அமைச்சர் பதவி விலக தயாரா என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ‘‘நயினார் நாகேந்திரன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது இல்லை. அந்த கட்சியில் பதவி ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் மட்டும்தான் இருக்கும்.
நான் அமைச்சராக இருக்கின்றேன். நயினார் மருத்துவ கல்லூரி தொடங்க விண்ணப்பம் கொடுத்தாரா? இல்லையா? அது நிராகரிக்கபட்டது என்பது வேறு. ஆனால் அவர் மருத்துவகல்லூரிக்கு விண்ணப்பம் கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அடுத்த முறை செய்தியாளர் சந்திப்பில் கேட்கும் போது ஆதாரத்தை நேரிலேயே காட்டி விடுகிறேன்’’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
