இதுல மட்டும் அனுபவம் ஜாஸ்தி; தவெக பண்றது குதிரை பேரம் இல்லாம என்னது? வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

கோவை: கோவை ராமநாதபுரத்தில் பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சியை பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேற்று பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்படுபவர் தமிழகத்தின் தேவைகளை, பிரச்னைகளை ஒன்றிய அரசுடன் பேசி பெற்றுத்தர வேண்டும். அந்த அளவிற்கு முக்கியமான பணி அது. இந்த நியமனம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்.

காவிரி பிரச்னை குறித்து முதல்வர் தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வருடன் பேசி தீர்வுகாண வேண்டும். தமிழக அரசின் அனுமதியின்றி எந்த அணையும் கட்ட அனுமதிக்க கூடாது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது இயல்பான ஒன்று. ஆனால், மிகவும் புத்திசாலித்தனமாக தவெக ஆட்சியமைத்த குறைவான காலத்திலேயே திட்டமிட்டு எம்எல்ஏ-களை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களின் சின்னத்தில் நிற்க வைக்க முயற்சி செய்கின்றனர்.

இதனை குதிரை பேரம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது. இந்த அரசுக்கு குறைவான அனுபவம் இருந்தாலும், குதிரை பேரத்தில் இவ்வளவு வேகமாக செயல்படுவதை பார்த்தால், இவர்கள் ஜனநாயக ரீதியாக செயல்படுகிறார்களா? என்ற சந்தேகம் வருகிறது. சட்டமன்றத்தில் விஜய் தொடர்பான விவகாரத்தில் யார் வேண்டுமானாலும் சபாநாயகரிடம் புகார் அளிக்கலாம். சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்பாமல் தொகுத்து வெளியிடுவது வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.

* மருத்துவ சோதனைக்கு அமைச்சர் தயாரா?
‘‘போதைப்பொருள் பயன்படுத்தியதாக அமைச்சர் சரத்குமார் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவர் மருத்துவ பரிசோதனைக்கு தயாராகி தன் மீது உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க முன்வருவாரா?’’ என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: