பெண்கள், குழந்தைகளுக்கான குடும்ப பராமரிப்பு சோதனை திட்டம்: காந்திநகரில் தொடக்கம்

காந்திநகர்: தகுதி வாய்ந்த குழந்தைகளும், பெண்களும் எந்தவொரு அரசு நலத்திட்டங்களில் இருந்து விடுபடுவதை தடுப்பதற்காக பிஎம் குடும்ப பராமரிப்பு கண்காணிப்பு திட்டம் சோதனை முயற்சியாக குஜராத்தின் காந்தி நகரில் நேற்று தொடங்கப்பட்டது. காந்திநகர் மக்களவை தொகுதி எம்பியான ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் கர்ப்ப காலம் முதல் 16 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் கண்காணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தை தடுப்பூசியை தவற விட்டாலோ, குழந்தைகள் பள்ளி படிப்பை நிறுத்தினாலோ உடனடியாக எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் எம்பிக்களுக்கு அறிவிப்புகள் செல்லும்.

இந்த திட்டம் காந்திநகரில் வெற்றியடையும் பட்சத்தில் குஜராத் முழுவதும் அமல்படுத்தப்பட்டு பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இவ்விழாவில் பேசிய அமித்ஷா, ‘‘மோடி பிரதமராக பொறுப்பேற்ற 2014ம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் வரலாற்று சிறப்புமிக்க திருப்புமுனை. இந்தியாவின் பயணத்தை எதிர்கால வரலாற்று ஆசிரியர்கள் 2014க்கு முந்தைய காலம், 2014க்கு பிந்தைய காலம் என இருகட்டங்களாக பிரிப்பார்கள் ’’ என்றார்.

Related Stories: