ராணுவ வீரர் மரணம் மறைப்பு விவகாரம்; நாடாளுமன்றத்தை ராஜ்நாத் சிங் தவறாக வழிநடத்தினாரா..? ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் பலியானதை மறைத்து, நாடாளுமன்றத்தில் தவறான தகவல் அளித்ததாக ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் மீது எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்துார்’ நடவடிக்கையின் போது, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் ஆறு வீரர்கள் வீரமரணமடைந்தனர். இது தொடர்பாக கடந்த 2025ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் நடந்த விவாதத்தின் போது பேசிய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இந்த நடவடிக்கையின் போது இந்திய வீரர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், வீரமரணமடைந்த சுபேதார் மேஜர் பவன் குமார், ரைபிள்மேன் சுனில் குமார் (வீர் சக்ரா), லான்ஸ் நாயக் தினேஷ் குமார், ஏவியேஷன் டெக்னீஷியன் மூட் முரளி நாயக், ஹவில்தார் சுனில் குமார் சிங் மற்றும் விமானப்படை சார்ஜென்ட் சுரேந்திர குமார் (வாயு மெடல்) ஆகியோரின் பெயர்கள் தற்போது டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் அதிகாரப்பூர்வமாக பொறிக்கப்பட்டுள்ளன. வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தை ராஜ்நாத் சிங் தவறாக வழிநடத்தியதாக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள் மணிஷ் திவாரி மற்றும் பவன் கெரெ அளித்த பேட்டியில், ‘ஒன்றிய அமைச்சருக்கு தனது அமைச்சகத்தில் நடப்பதே தெரியவில்லையா அல்லது உண்மையை மறைத்து நாடாளுமன்றத்தில் பொய் கூறினாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகம், ‘அமைச்சரின் பேச்சு தவறாக சித்தரிக்கப்படுகிறது; ஆபரேஷன் சிந்தூரில் விமானிகள் உயிரிழந்ததாக பரவிய வதந்தியை மறுக்கவே அவர் அவ்வாறு கூறினார். மேலும், வீரர்களின் தியாகம் குறித்து ஏற்கனவே ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குனர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அவர்களின் வீரதீர செயல்களுக்காக 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியே விருதுகள் வழங்கப்பட்டன’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: