மும்பை: மொகரம் ஊர்வலத்தில் 15,000 பேரை விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பைகுல்லா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மொகரம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ரேய் ரோடு பகுதியில் உள்ள மயானம் அருகே கூடியிருந்த கூட்டத்தில் ஒரு வாலிபர் மாத்திரைகளை விநியோகித்து வந்தார். இதனை கவனித்த 3 பெண் தன்னார்வலர்கள், அந்த வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவரை தடுத்து நிறுத்தினர்.
அந்த மாத்திரைகளை பிரித்து பார்த்தபோது அதில் மர்ம பொடி இருந்தது தெரிந்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் பெயர் பயாஸ் பிரேம்ஜி என்பதும், அவர் பிபிஏ பட்டதாரி என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 14,900 விஷ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அந்த நபர் ‘குறைந்தது 15,000 பேரை கொல்ல திட்டமிட்டேன்’ என்று போலீசாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த மாத்திரைகளில் எலி விஷத்தில் பயன்படுத்தப்படும் ‘சிங்க் பாஸ்பைடு’ என்ற உயிர்க்கொல்லி வேதிப்பொருள் கலக்கப்பட்டிருந்தது உறுதியானது.
அந்த மாத்திரைகளை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து என்று பொய் கூறி அவர் விநியோகித்துள்ளார். ஏற்கனவே இந்த மாத்திரைகளை உட்கொண்ட சல்மான் சையத் உள்ளிட்ட 11 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பினர். கைதான பயாஸ் பிரேம்ஜி, ஈரான் மற்றும் ஈராக் நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இது தொடர்பாக தீவிரவாதம் மற்றும் சதித் திட்டம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
