விபத்தில் 12 வயது சிறுமி பலி; பேரிகார்டுகளை தகர்த்து போலீசார் மீது பாய்ந்த லாரி: போதை டிரைவரை விரட்டி பிடித்ததால் பரபரப்பு

மோகலா: சட்டீஸ்கரில் போதை டிரைவர் நடத்திய கோர தாண்டவத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் மோகலா-மான்பூர்-அம்பாகர் சவுகி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த விபத்தில், குண்டர்தேகி கிராமத்தைச் சேர்ந்த பூனம் (12) என்ற சிறுமி லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர், சிறுமி மீது மோதிய பின்பும் வாகனத்தை நிறுத்தாமல் சுமார் 2 மணி நேரமாக மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அசுர வேகத்தில் லாரியை ஓட்டிச் சென்றார். இந்த விபத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் சிறுமியின் குடும்பத்தினர், உயிரிழந்த சிறுமியின் உடலை சாலையில் வைத்து சுமார் 2 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். தப்பியோடிய டிரைவரை பிடிக்க போலீசார் மோகலா மற்றும் மான்பூர் எஸ்டிஎம் அலுவலகம் அருகே தடுப்புகளை அமைத்தனர். ஆனால், போதையில் இருந்த டிரைவர் போலீசாரின் தடுப்புகளை லாரியால் மோதி தள்ளிக் கொண்டு, அவற்றை நீண்ட தூரம் இழுத்துச் சென்றார். மான்பூர் நகருக்குள் லாரி புகுந்தபோது அங்கிருந்த போலீசார் மயிரிழையில் உயிர் தப்பினர்.

மகாராஷ்டிரா எல்லைக்கு 6 கி.மீ முன்பாக கோர்கொட்டி கிராமம் அருகே லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த நிலையில், போலீசார் டிரைவரை மடக்கிப் பிடித்தனர். காயமடைந்த டிரைவர் சிகிச்சைக்காக மான்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘லாரி பறிமுதல் செய்யப்பட்டு விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது’ என்று தெரிவித்தனர்.

Related Stories: