ராமர் கோயில் காணிக்கை கையாடல் வழக்கில் கைதான 8 பேர் வீடுகளில் போலீஸ் அதிரடி சோதனை

அயோத்தி: ராமர் கோயில் பணம் கையாடல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். உபி மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் காணிக்கை பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாநில பாஜ அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த வழக்கில், கோயில் ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

பணம் எண்ணும் பிரிவில் பணியாற்றிய அவினாஷ் சுக்லா,அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, மனீஷ் யாதவ், டினு யாதவ் உள்ளிட்ட 8 ஊழியர்களை ேபாலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சிசிடிவி கேமராக்கள் மூலம் பணம் திருடுவதைக் கண்காணிக்கும் போது பிடிபட்டனர். கைதானவர்கள் அனைவரையும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது அவர்களை காவலில் எடுக்க போலீசார் கோரிக்கை விடுப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில்,கைதான 8 பேரின் வீடுகளில் நேற்று ஒரே சமயத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு ஆவணங்களை சோதனை செய்தனர். இதில் சிலரின் பக்கத்து வீட்டுகாரர்களை சந்தித்து அவர்களுடைய சொத்து விவரங்கள், குடும்ப பின்னணி குறித்து கேட்டறிந்தனர்.

இந்த நபர்களிடம் இருந்து ரூ. 79.85 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கைதான அனுகல்ப் மிஸ்ரா ரூ.40 லட்சத்திற்கு வீடு வாங்கியது அம்பலமாகியுள்ளது. இதை தவிர இந்த வழக்கில் மேலும் சிலரின் பங்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: