புதுடெல்லி: பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் நிகழ்ச்சியில் நேற்று உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியது: ஜூன் மாத வெற்றிகள் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தற்சார்போடு தொடர்புடையவை. ஜூன் மாதத்தில் தான் விமானத்துறையில், தேசம் பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது. சி-295 என்ற விமானம் முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. மேலும் சி-295 விமானம் தனது முதல் வான் பயணத்தை நிறைவு செய்திருக்கிறது.
இந்திய விமானப்படை சுமார் ரூ.21,935 கோடி செலவில் 56 சி-295 போக்குவரத்து விமானங்களைக் கொள்முதல் செய்கிறது. இதில் நாற்பது, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து வதோதராவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையில் அசெம்பிள் செய்யப்படும். சமீபத்தில் கொல்காத்தாவிலே, கடற்படை நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கே ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரே ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன.
இந்தக் கப்பல்களின் வடிவமைப்பும், தயாரிப்பும், அனைத்துமே நம் நாட்டிலேயே ஆனவை. இந்த மாதம் தான், டிஆர்டிஓ நிறுவனம், உள்நாட்டுத் தயாரிப்பான நீண்டதூர தரைத்தாக்குதல் க்ரூஸ் ஏவுகணையின் வெற்றிகரமான பரிசோதனையை நிறைவு செய்திருக்கிறது. இதனை டிஆர்டிஓவின் பரிசோதனைக்கூடங்களும், இந்திய தொழில்துறைக் கூட்டாளிகளும் இணைந்து உருவாக்கி இருக்கின்றார்கள். இன்று கடல் தொடங்கி, வானம் வரை பாரதம் அதிக அளவிலே பாதுகாப்பாகவும், தற்சார்பு உடையதாகவும் ஆகி வருகிறது. இவ்வாறு மோடி பேசினார்.
