×

விபி ஜி ராம் ஜி திட்டத்தை ஏற்றுக்கொண்ட பஞ்சாப் அரசு: ஜூலை 1ம் தேதி முதல் அமல்

சண்டிகர்: விபி ஜி ராம் ஜி திட்டத்தை எதிர்த்து வந்த பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பக்வந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் இருந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை அரசு கூட்டியிருந்தது.

அந்த கூட்டத்தில் திட்டமிட்ட சதி மூலமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை ரத்து செய்து ஏழைகள் மற்றும் தலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாஜ தலைமையிலான அரசு பறிப்பதாக குற்றம்சாட்டி விபி ஜி ராம் ஜீ சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், விக்சித் பாரத் கேரண்டி ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் கிராமின் திட்டத்தை எதிர்த்து வந்த பஞ்சாபின் ஆம் ஆத்மி அரசு தற்போது அந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் விபி ஜி ராம் ஜி திட்டம் அமலுக்கு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

* ஒப்பந்தம் என்ன?
பாஜ உடனான எந்த ஒப்பந்தம் மற்றும் சமரசத்தின் அடிப்படையில் பஞ்சாபில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங் கூறுகையில்,‘‘பஞ்சாப் அரசினால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலநேரம் ஆச்சரியமளிப்பதாக அமைந்திருந்தாலும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த திட்டம் திடீரென செயல்படுத்தப்படுவதற்கும், முதல்வர் தொடர்பான தற்போதைய சர்ச்சைக்குரிய வீடியோவுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? ஆம் ஆத்மி கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள நிலையில் முதல்வர், பாஜ உடன் சமாதானம் காண முயற்சிக்கிறாரா? இல்லையெனில் மாநிலச் சட்டப்பேரவை ஒரு மனதாக நிராகரிக்க தீர்மானித்த ஒரு திட்டத்தை பஞ்சாபில் செயல்படுத்துவதற்கு வேறு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை” என்றார்.

Tags : Punjab government ,Chandigarh ,Punjab Aam Aadmi Party government ,Aam Aadmi Party government ,Chief Minister ,Bhagwant Mann ,Punjab ,
× RELATED திரிணாமுல், ஆம்ஆத்மி, உத்தவ் சிவசேனா...