புதுடெல்லி: உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் பழைய நிலைக்கு சென்ற பின்னரும், எரிபொருள் விலை அதிகமாக இருப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி எழுப்பி இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பாஜவின் கொள்ளை மற்றும் பிக்பாக்கெட் அடிக்கும் பழக்கம்- கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகின்றது. ஆனாலும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைப்பதற்கு பதிலாக மோடி அரசு மக்களின் சேமிப்பின் மீதான பிடியை இறுக்கிக்கொண்டே இருக்கிறது.
அரசிடம் மூன்று கேள்விகளை முன் வைக்கிறேன். மேற்கு ஆசியாவில் போர் உச்சத்தில் இருந்தபோது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 138 அமெரிக்க டாலராக இருந்தது. அப்போது டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.87.67ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு70.71 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.
அப்படியிருக்க மோடி அரசு ஏன் இன்னும் டெல்லியில் பெட்ரோலை லிட்டருக்கு ரூ.102.12க்கும் டீசலை லிட்டருக்கு ரூ.95.20க்கும் விற்கிறது? போர்ச்சூழலை காரணம் காட்டி வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி விலையை பாஜ அரசு இருமடங்காக உயர்த்தியது. இப்போது விநியோகம் சீராகிவிட்ட நிலையில் ஏன் எல்பிஜி விலைகள் குறைக்கப்படவில்லை?
தற்போது நிலைமை இயல்புக்கு திரும்பிய நிலையில், விலையைக் குறைப்பதில் மட்டும் மோடி அரசின் கைகள் ஏன் நடுங்குகின்றன.? கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோது மக்கள் பாதிக்கப்பட்டார்கள். தற்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போது ஏன் மக்கள் தொடர்ந்து சுமையை சுமக்க வேண்டியுள்ளது. இது வெளிப்படையான ஒன்று. வரிகளை வசூலிப்பதில் தங்கள் வருவாயை அதிகரிப்பதற்குமான ஒரு கருவியாக மட்டுமே பாஜ மக்களை பார்க்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
