புதுடெல்லி: ஈரான் போரில் மத்தியஸ்தர் இடத்தை பாகிஸ்தானுக்கு கொடுப்பதா என்று கேள்வி எழுப்பி சோனியா காந்தி விமர்சித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியாகாந்தி எழுதியுள்ள கட்டுரையில்,‘‘ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்கு முன்னதாக பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு மேற்கொண்ட பயணமானது வியக்கத்தக்க மற்றும் குழப்பமான ஒரு மூலோபாய முடிவாகும்.
குழந்தைகள் மிக கொடூரமான முறையில் குறிவைக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்குக்காக குரல் கொடுப்பதை இந்திய தேசிய உணர்வு கோருகிறது. காசாவில்இஸ்ரேலிய ஆட்சியின் இனப்படுகொலை நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் லட்சக்கணக்கான பாலஸ்தீனியக் குடும்பங்களை கொடூரமான முறையில் இடம்பெற செய்தல் மற்றும் அவர்களின் உடைமைகளை பறித்தல் ஆகியவற்றுக்கு எதிரான உலகளாவிய பொதுக் கருத்துக்கு இந்தியா பதிலளிக்க வேண்டும் என்பதை தேசிய நலன் சார்ந்த கணக்கீடுகள் கோருகின்றன.
மோடி அரசின் கல்லான தொடர்ச்சியான மவுனத்தை பகுத்தறிவு ரீதியாகவோ அல்லது தார்மீக ரீதியாகவோ விளக்கவே முடியாது. ஈரான் மற்றும் பரந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தனது வரலாற்று சிறப்பு மிக்க நட்பு நாடுகளிடம் இருந்தும் உலகளாவிய பொதுக் கருத்துக்களில் இருந்தும் இந்தியா தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளது, அதே வேளையில் மத்தியஸ்தர் என்ற இடத்தை பிடிப்பதற்கு பாகிஸ்தானுக்கு வாய்ப்பளித்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
