உலக பொருளாதார மன்றம் ஆய்வறிக்கை இந்தியாவில் வேலைவாய்ப்பு 5 ஆண்டில் 22 சதவீதம் சரியும்: செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் உள்ளிட்ட துறைகளுக்கு கவலை இல்லை

புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பானது 22 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்றும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), இயந்திர கற்றல் (மெஷின் லேர்னிங்), தகவல் அறிவியல் (டேட்டா சயின்ஸ்) போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் உலக பொருளாதார மன்றம் புதிய ஆய்வில் தெரிவித்துள்ளது. உலக பொருளாதார மன்றம், உலகளாவிய எதிர்கால வேலைவாய்ப்பு குறித்து ஆய்வினை சமீபத்தில் நடத்தியது. இதில் 803 நிறுவனங்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து, ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது.

இந்த அறிக்கையில், உலகளாவிய வேலைவாய்ப்பு 23 சதவீதம் சரியும் என கூறப்பட்டுள்ளது. அதாவது 2027ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 67.3 கோடி வேலைகளில் 6.9 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் நிலையில், 8.3 கோடி வேலைகள் அடியோடு காலி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த புதிய வேலைவாய்ப்பின் வளர்ச்சி 10.2 சதவீதமாக இருக்கும் நிலையில், அதன் சரிவு 12.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத் தவரையில் 5 ஆண்டில் 22 சதவீதம் வேலைவாய்ப்புகள் சரியும் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம், 61 சதவீத நிறுவனங்கள் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக பிரிவுகளில் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதாகவும், டிஜிட்டல் அணுகலை விரிவுபடுத்துவதாகவும் கூறியிருப்பதன் மூலம் அவற்றில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இந்தியாவில் தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய துறைகளாக செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் தகவல் அறிவியல் மற்றும் தகவல் ஆய்வாளர்கள் பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.

‘‘கொரானோவால் கடந்த 3 ஆண்டுகள் வேலைவாய்ப்புகளில் நிலவிய நிச்சயமற்ற தன்மை, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சியால் எதிர்காலத்திலும் தொடரும். எனவே கல்வி, புதிய திறன்களை பெறச் செய்தல், சமூக ஆதரவு கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்குவதில் அரசும், தொழில் துறையும் முதலீடு செய்வதன் மூலம் எதிர்கால வேலை மாற்றத்திற்கு ஏற்ற திறன்கள் மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய முடியும்,’’ என உலகப் பொருளாதார மன்றத்தின் நிர்வாக இயக்குநர் சாடியா ஜாஹிடி கூறினார்.

* யாருக்கு பாதிப்பு?
அடுத்த 5 ஆண்டில் மனித உழைப்பை விட இயந்திரமயமாக்கலை அதிக நிறுவனங்கள் விரும்புகின்றன. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முதலிடத்தை பிடித்துள்ளது. இது வேலைவாய்ப்பில் பெரும் சரிவை ஏற்படுத்தும். பல வேலைகளை இல்லாமலேயே ஆக்கிவிடும். செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் நிபுணர்கள், தகவல் பாதுகாப்பு நிபுணர்கள், பின்டெக் பொறியாளர்கள், தகவல் ஆய்வாளர்கள், ரோபாடிக்ஸ் பொறியாளர்கள், வேளாண் கருவிகளை இயக்குபவர்கள், டிஜிட்டல் மயமாக்கல் நிபுணர்கள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அதே சமயம், டெலி காலர், வங்கி கிளார்க், தபால் சேவை கிளார்க், கேஷியர், டிக்கெட் வழங்குநர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற வேலைகளில் வாய்ப்புகள் வேகமாக குறையும்.

The post உலக பொருளாதார மன்றம் ஆய்வறிக்கை இந்தியாவில் வேலைவாய்ப்பு 5 ஆண்டில் 22 சதவீதம் சரியும்: செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் உள்ளிட்ட துறைகளுக்கு கவலை இல்லை appeared first on Dinakaran.

Related Stories: