சிங்கப்பெருமாள் கோயில் அருகே விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்

செங்கல்பட்டு: விநாயகர் சிலை தயாரிக்கும் பணி நடைப்பெற்று வருகின்றது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18ம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள திருத்தேரி பகுதியில் மண்பாண்ட பொருட்கள், பொம்மைகள், மண்பாண்ட அலங்கார பொருட்கள் மற்றும் விளக்குகள் விற்பனை கூடம் உள்ளது.

இதில், புதிதாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திரா மாநிலம், புதுவை, விஜயவாடா, திருப்பதி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு, காகித கூழ், வாட்டர் கலர் உள்ளிட்ட மூலப்பொருட்களை கொள்முதல் செய்து திருத்தேரி பகுதியில் இரண்டு இடங்களில் கூடங்கள் அமைத்து சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, இங்கு 30க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு ஒரு அடி முதல் 10 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்காக உள்ளது. இந்த சிலை ரூ.100 முதல் ரூ.35 ஆயிரம் மதிப்பிலானவை. இதனை வாங்குவதற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், ‘‘இந்தாண்டு விநாயகர் சிலைகளை வெளி மாநிலங்களில் இருந்து வரவழைப்பதற்கு பதிலாக நாங்கள் புதிதாக தயாரிக்கும் விநாயகர் சிலையானது எளிதில் கரைய கூடிய வகையில் பேப்பர்கூழ், ஜவ்வரிசி, கிழங்குமாவு, களிமண் போன்றவற்றால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது எங்களிடம் மூன்று முக விநாயகர், பாகுபலி விநாயகர், விவசாய விநாயகர், நரசிம்ம விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சயன விநாயகர், நந்திகேஷ்வரா விநாயகர், கற்பக விநாயகர் திருப்பதி விநாயகர், சிவன்பார்வதி விநாயகர், சிங்கவாகன விநாயகர், எலி, நந்தி உள்ளிட் பல வடிவங்களில் அதாவது 30க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறோம்,’’ என்றனர்.

The post சிங்கப்பெருமாள் கோயில் அருகே விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: