சோழிங்கநல்லூர்:சென்னை ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலை, சோமசுந்தரம் தெரு பகுதியை சேர்ந்தவர் மயங்க் நாகாத்தா (43). இவர், அதே பகுதியில் மரக்கடை மற்றும் பிளைவுட் கடை நடத்தி வருகிறார். கடந்த 25ம் தேதி இவர், தனது குடோனை திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டு இருந்த பிளைவுட்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது தெரிந்தது. உடனே, கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, சிலர் குடோனை திறந்து சரக்கு ஆட்டோ மூலம் பிளைவுட்களை திருடி செல்வது தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த மயங்க் நாகாத்தா, இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசார், வாகன பதிவு எண்ணை வைத்து, மடிப்பாக்கம் பகுதியில் 3 பேரை கைது செய்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர்கள் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் (32), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜவகர் (23), எழும்பூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (23) என்பதும், இவர்கள் பிளைவுட்களை திருடிச் சென்று, ஒரு மரக்கடையில் ரூ.3,000 மதிப்புள்ள பிளைவுட்களை வெறும் ரூ.800க்கு விற்றது தெரிய வந்தது.
இவர்கள் மூவரும் கொடுத்த தகவலின்பேரில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தினேஷ் (24), ஓட்டேரி பகுதியை சேர்ந்த அஜீத் (25) ஆகிய இருவரை ஓட்டேரி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மரக்கடையில் வேலை செய்த யாரோ ஒரு நபர், குடோன் சாவியை எடுத்து, போலி சாவி தயாரித்து இவர்களுக்கு கொடுத்ததும், இவர்கள் அடிக்கடி கடையின் உரிமையாளருக்கு தெரியாமல் குடோனை திறந்து பிளைவுட்டுகளை திருடி, பல்வேறு பகுதிகளில் விற்று வந்ததும் தெரிய வந்தது.
இதற்கு மூளையாக சதீஷ் என்ற நபர் செயல்பட்டு வந்துள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுவரை சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பிளைவுட்கள் திருடப்பட்டு இருப்பதாகவும், இதில் தற்போது ரூ.2 லட்சம் மதிப்புள்ள பிளைவுட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
The post மரக்கடை குடோனை திறந்து ரூ.7 லட்சம் பிளைவுட்களை திருடிய 5 பேர் சிக்கினர்: போலி சாவி தயாரித்து கைவரிசை appeared first on Dinakaran.