பெண் கவுன்சிலரின் கணவர் காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை: பிரபல ரவுடி கும்பலுக்கு வலை

குலசேகரம்: திருவட்டார் அருகே முன் விரோதத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி தலைமையிலான கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். குமரி மாவட்டம் திருவட்டார் அடுத்த குன்னத்துவிளையை சேர்ந்தவர் ஜாக்சன் (37).  இவர் சொந்தமாக டெம்போ வைத்து தொழில் செய்து வந்தார். திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இவரது மனைவி உஷாகுமாரி (36). திருவட்டார் பேரூராட்சி 10வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர்.

இவர்களுக்கு 2 மகள்கள். ஜாக்சனுக்கும், சிதறால் அடுத்த வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ராஜகுமார் என்ற விலாங்கனுக்கும் (31) முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ராஜகுமார், அவருடன் வந்தவர்கள் ஜாக்சனின் காரை அடித்து நொறுக்கி, அவரையும் தாக்கினர். இது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. இதை வாபஸ் பெறும்படி ஜாக்சனிடம் அவர் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் ஜாக்சன், பாரதப்பள்ளி ஆர்.சி. தேவாலயம் முன் நின்றிருந்தார். அப்ேபாது 2 பைக்குகளில் அங்கு வந்த ராஜகுமார் மற்றும் 5 பேர் கும்பல் அவரிடம் தகராறு செய்தனர். திடீரென ராஜகுமார் அரிவாளால் ஜாக்சனை வெட்டினார்.

மற்றவர்களும் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கம்பியாலும் தாக்கினர். அருகில் உள்ள வீட்டில் இருந்து ஜாக்சனின் மனைவி உஷாகுமாரி மற்றும் அப்பகுதியினர் ஓடி வரவே கும்பல் தப்பியது. ரத்த வெள்ளத்தில் துடித்த ஜாக்சனை மீட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். எஸ்.பி. சுந்தரவதனமும் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். கொலைக்கு முன்விரோதமே காரணம் என்று அவர் தெரிவித்தார். கொலையாளிகளை பிடிக்க வலியுறுத்தி இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

கொலை செய்த முக்கிய குற்றவாளியான ராஜகுமார் மீது திருவட்டார், அருமனை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சிகள் உள்பட 23 வழக்குகள் உள்ளன. அரிசி கடத்தல், மணல் கடத்தல் வழக்குகளும் உண்டு. அருமனை காவல் நிலைய போலீஸ் ரவுடி பட்டியலிலும் உள்ளார். ஏற்கனவே இவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post பெண் கவுன்சிலரின் கணவர் காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை: பிரபல ரவுடி கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: