காதலிக்கலன்னா… தற்கொலை செய்வேன்; போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பெண் தொல்லை

பெங்களூரு: பெங்களூரு ராமமூர்த்தி நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 45 வயது காவல் ஆய்வாளருக்கு, அவரது அலுவல் ரீதியான செல்போன் எண்ணுக்கு புதிய எண்ணிலிருந்து கடந்த அக்டோபர் 30ம் தேதி ஒரு போன் வந்துள்ளது. அதன்பிறகு அதே பெண் வெவ்வேறு செல்போன் எண்ணிலிருந்து ஆய்வாளரைத் தொடர்புகொண்டு, அவரைக் காதலிப்பதாக கூறியுள்ளார்.

முதல்வர், துணை முதல்வர், உள்துறை அமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களைத் தனக்குத் தெரியும் என்றும், உயர்மட்ட அளவில் பலரைத் தனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியதுடன், எனது காதலை ஏற்கவில்லை என்றால், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பணியிடமாற்றம் செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். வாட்ஸ் அப் எண்ணுக்கு போட்டோக்கள் அனுப்புவது, தொடர்ச்சியாக போன் செய்து பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்வது என டார்ச்சர் செய்த அந்தப் பெண், தனது காதலை ஏற்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இது அலுவல் ரீதியான செல்போன் எண் என்பதால் இதற்கு தொடர்புகொள்ள வேண்டாம் என்றும், ஏதேனும் பிரச்னை என்றால் காவல் நிலையத்திற்கு வருமாறும் ஆய்வாளர் கூறியுள்ளார்.

அவர் பணிபுரியும் ராமமூர்த்தி காவல் நிலையத்திற்கு கடந்த நவம்பர் 7ம் தேதி நேரில் சென்ற அந்தப் பெண், ஆய்வாளரிடம் சில கடிதங்களையும், சில மாத்திரைகளையும் கொடுத்துவிட்டு, தனது காதலை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார். இதையடுத்து ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் அந்தப் பெண் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அந்தப் பெண் குறித்து விசாரணை நடத்தியதில், அவர் ஏற்கனவே சில அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகளிடம் இதேபோன்று காதலிப்பதாகக் கூறி மிரட்டியது தெரியவந்தது. ஆய்வாளரை பணி செய்யவிடாமல் மன ரீதியாக தொந்தரவு செய்த அந்தப் பெண் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: