வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க மசினகுடி ரேஷன் கடைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

*கூட்டுறவுத்துறை புது டெக்னிக்

ஊட்டி : வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் முதல்முறையாக ஊட்டி அருகேயுள்ள மசினகுடி ரேஷன் கடைக்கு மூன்றடுக்கு இரும்பு தடுப்புகள் அமைந்து பாதுகாப்பு வசதியை கூட்டுறவுத்துறை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி, வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாகும். பெரும்பாலான கிராமப்பகுதிகள் வனத்தை ஒட்டி அமைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ரேஷன் கடைகளை யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்தி அங்கு வைக்கப்பட்டுள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை உட்கொள்வது வாடிக்கையாக உள்ளது.

இதனால், கூட்டுறவுத்துறைக்கு இழப்பு ஏற்படுவதுடன், ஊழியர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி பகுதியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் உள்ள ரேஷன் கடையை காட்டு யானை உடைத்து உணவு பொருட்களை சேதப்படுத்தியது. ரேஷன் கடை சீரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த கடையை யானை சேதப்படுத்தியதால் இதனை தடுக்க கூட்டுறவு இணை பதிவாளர் தயாளன் அறிவுரைப்படி மீண்டும் சீர் செய்யப்பட்டு மூன்றடுக்கு இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மசினகுடி ரேஷன்கடையை சுற்றிலும் முதல் அடுக்கில் சோலார் மின்வேலி கம்பிகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டது. இரண்டாவது அடுக்கில் இரும்பு நுழைவாயில் கேட் அமைக்கப்பட்டுள்ளது மூன்றாவதாக கடைக்கு வலுவான இரும்பு ஷெல்டர் பொருத்தப்பட்டுள்ளது.இதன்மூலம், யானைகள் ரேஷன் கடையை சேதப்படுத்துவது குறைந்துள்ளது. முதல்கட்டமாக, முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள 1100 குடும்ப அட்டைகள் கொண்ட மசினகுடி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு இம்முயற்சி சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதில் வனவிலங்குகள் இடையூறு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் கரடி மற்றும் யானைகள் அச்சுறுத்தல் உள்ள ரேஷன் கடைகளில் இது போன்ற மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் ரேஷன் கடைகள் கொண்டு வரப்படும் என கூட்டுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன் கூறுகையில்,“யானை தாக்கி சேதப்படுத்துவதை தடுக்கும் நோக்கில் மசினகுடி ரேஷன் கடைக்கு சோலார் வேலி, இரும்பு கேட் மற்றும் இரும்பு ஷட்டர் என மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், வனவிலங்குகளால் ரேஷன் கடை தாக்கப்படுவது குறையும். இதேபோல், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள வனவிலங்குகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் என கண்டறியப்பட்டுள்ள ரேஷன் கடைகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்’’ என்றார்.

The post வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க மசினகுடி ரேஷன் கடைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: