மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பரவலாக கொட்டித் தீர்த்த கனமழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

 

மதுரை: மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக மழை கொட்டித் தீர்த்ததால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று 9 மணி முதமல் சுமார் இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மாநகரின் முக்கிய பகுதிகளான ரயில் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம் அண்ணா நகர், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், வில்லாபுரம், ஆனையூர், மேலமடை உள்ளிட்ட நகரில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மதுரை ரயில் நிலையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. இதனால், அந்த பகுதி முழுவதிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகரின் ஒரு சில இடங்களில் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் மழை அளவு: மதுரை வடக்கு பகுதியில் 120.80 மி.மீ. மேட்டுப்பட்டி 96 மி.மீ., பெரியபட்டி 85 மி.மீ. உசிலம்பட்டி 8 மி.மீ., சராசரியாக மாவட்டம் முழுவதும் 42.63 மி.மீ மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், காரியாபட்டி என ஒரு சில இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. இதில் ராஜபாளையத்தில் 12 மி.மீ., காரியாபட்டியில் 30.60 மி.மீ., விருதுநகரில் 18 மி.மீ., பிளவக்கல் அணை பகுதியில் 1.2 மி.மீ., வெம்பக்கோட்டையில் 9.9 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக காரியாபட்டியில் 30.60 மி.மீ. பதிவானது. அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி போன்ற பகுதிகளில் மழை இல்லை. திண்டுக்கல்லில் மழையளவு திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் ரோஸ் கார்டனில் 32 மிமீ, பிரையன்ட் பூங்காவில் 37.4 மிமீ. பழநியில் 10 மி.மீ, சத்திரப்பட்டியில் 14.2 மி.மீ, நத்தத்தில் 48 மிமீ, நிலக்கோட்டையில் 45 மி.மீ, வேடசந்தூரில் 6.1 மி.மீ, வேடசந்தூர் புகையிலை நிலையத்தில் 6.1 மி.மீ, காமாட்சிபுரத்தில் 9.3 மி.மீ என மாவட்ட அளவில் மொத்தம் 208.10 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதேபோல, தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.

மின்சாதனப் பொருட்கள் சேதம் திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு 11 மணி முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், நகரில் மின்தடை ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மணிநேரம் கொட்டி தீர்த்த மழையால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய் மற்றும் ஊருணிக்கு தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. மதுரை ரோட்டில் ராஜாஜி சிலை பெட்ரோல் பங்க் அருகே, மழைநீர் சாலையில் தேங்கியதால் இன்று காலை வாகன ஓட்டிகள், அதனை கடந்து செல்ல சிரமப்பட்டனர். தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகம் மோட்டார் மூலமாக மெயின் ரோட்டில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியை மேற்கொண்டது. திருமங்கலம் அருகேயுள்ள கிண்ணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பூவசவரம்பட்டியை சேர்ந்த விவசாயி செல்லபாண்டியன் (45). நேற்று நள்ளிரவு இவரது வீட்டில் மின்னல் தாக்கியதில் வீட்டின் சுவர் விரிசல் அடைந்தது. மேலும் வீட்டிலிருந்த டிவி, பிரிட்ஜ், கம்பூட்டர், பேன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

The post மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பரவலாக கொட்டித் தீர்த்த கனமழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: