வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்..!!

சென்னை: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன. தமிழ்நாட்டில் பொள்ளாச்சி சோலையாறு அணை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் இருவர் உயிரிழந்திருப்பதும் வேதனையளிக்கிறது. நிலச்சரிவில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். தேவைப்பட்டால், மீட்புப் பணிகளுக்கு இராணுவத்தை ஒன்றிய அரசு அனுப்பி வைக்க வேண்டும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரண மற்றும் மறு சீரமைப்புப் பணிகளுக்கு தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் தொடங்கி குஜராத் வரை நீளும் 1.60 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலை இயற்கை நமக்கு கொடுத்த பெருங்கொடை ஆகும். அதை பாதுகாக்கத் தவறியதன் விளைவு தான் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு ஆகும். தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

The post வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: